உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: சென்னையில் தண்ணீர் கேன்களுக்கு தட்டுப்பாடு – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருவதாலும், குடிநீர் உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாகவும் சென்னையில் தண்ணீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் இயங்கி வரும் 1,650 குடிநீர் உற்பத்தி ஆலைகளில் 568 ஆலைகள் மட்டும் அனுமதியுடன் இயங்கி வருவதாகவும், மற்ற ஆலைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ‘சட்டவிரோதமாக செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து குடிநீர் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சட்டவிரோதமாக இயங்கி வரும் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் கடந்த 27-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலத்தடி நீர் எடுப்பதற்காக உரிமம் எளிய முறையில் கிடைப்பதற்கு தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்களுடைய வேலை நிறுத்த போராட்டம் நேற்று 4-வது நாளை எட்டியது.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக சென்னையில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை புழல் வள்ளுவர் நகரை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி பாஸ்கர் என்பவர் கூறியதாவது:-

கோடை வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. தண்ணீர் கேன் விற்பனை அதிகரித்துள்ள சூழ்நிலையில், இந்த பிரச்சினை எழுந்துள்ளது பொதுமக்களுக்கும், என்னை போன்ற வியாபாரிகளுக்கும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

குடிநீர் கேன் வினியோகம் இல்லாததால் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ஆண்டுந்தோறும் ஏற்படும் இந்த பிரச்சினைக்கு அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி பெற்று இயங்கும் ஆலைகளில் தண்ணீர் கேன்களை வாங்குவதற்கு வியாபாரிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களுக்கும் போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. எனவே ரூ.30-க்கு விற்பனையான தண்ணீரை கூடுதல் விலை விற்பனை செய்கிறார்கள்.

சென்னை குடிநீர் வாரிய தண்ணீரை கேன்களில் அடைத்து சில வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Source: https://www.dailythanthi.com/News/State/2020/03/01230747/Manufacturers-strike-echo-Deficiency-in-water-cans.vpf