திருநங்கைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை லயோலா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
புதிய பாதையில் திருநங்கைகள் – Trans Olympic 2020 என்ற நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் இன்று நடைபெற்றது. திருநங்கைகள் நலனுக்காகச் செயல்படும் பல்வேறு அமைப்புகள், காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
லயோலா கல்லூரியின் முதல்வர் முனைவர் தாமஸ், செயலாளர் முனைவர் சே.ச.செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்சித் தகவலியல் துறைத் தலைவர் டாக்டர் சின்னப்பன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
லயோலா கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் பேசும்போது, ”விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக், மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் விளையாட்டு வீரர்களாக ஜொலிக்கும் திருநங்கைகள் பங்கேற்கும் ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும். பாரா ஒலிம்பிக் போட்டியுடன் இணைந்து திருநங்கைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியையும் நடத்தலாம்” என்று வலியுறுத்தினர்.
விழாவில் கலந்துகொண்டவர்கள் இதனை வரவேற்றனர். உலக விளையாட்டு வீரர்கள் மிகப் பெரிய கவுரவமாகக் கருதுவது ஒலிம்பிக் போட்டிகளைத்தான். அதற்குக் காரணம், உலகம் கொண்டாடும் அணி விளையாட்டான கால்பந்து முதல் உலகின் பிரபல தனிநபர் விளையாட்டான டென்னிஸ் வரை முக்கிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருப்பதும், போட்டிகளில் கடைப்பிடிக்கப்படும் தரக் கட்டுப்பாடுகளும்தான். இந்நிலையில் லயோலா கல்லூரியின் இந்தக் கோரிக்கை வரவேற்கத்தக்கது என்று அவர்கள் கூறினர்.
இதன் முன்னோட்டமாக திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளை லயோலா கல்லூரி நடத்துவதாக அறிவித்தது. சௌந்தர்யா, நான்சி, சிட்டு கார்த்திகை, சிவஸ்ரீ, ஸ்ரீஜா ஆகிய 5 திருநங்கைகள் இந்த விளையாட்டுப் போட்டிக்காகத் தயாராக உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை கிழக்கு காவல் இணை ஆணையர் சுதாகர் ஐபிஎஸ், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட நீதிபதி கே.ராஜசேகர், தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மைச் செயலாளர் மதுமதி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் டாக்டர் மணிமாறன் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
பிரபல புகைப்பட நிபுணர் முனைவர் ராமச்சந்திரன் திருநங்கைகளின் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிக்கு நடுவராகப் பங்கேற்றார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் திருநங்கைகளின் கோலப் போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்.
திருநங்கைகள் மட்டுமே பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக திருநங்கை கலைமாமணி சுதா பங்கேற்று நடத்தினார். கோலப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் 5 பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சூளைமேடு காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்பாபு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
திருநங்கைகள் ரூபகலா மற்றும் மோகன பிரபாவிற்கு சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் சூளைமேடு காவல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டது.
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/544223-transgender-olympics-to-be-held-request-at-loyola-college-festival-chennai.html