சென்னை: சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், பெருநகர் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 7,8,10,11 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் கூறுகையில், தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள், வீடுகள்தோறும் சென்று கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிதல், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் தொற்று உள்ள நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும் இவர்களோடு தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இதனால் சமீபகாலமாக சென்னையில் வைரஸ் தொற்று பரவுதல் வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதே நேரத்தில் வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையிலும் பல்வேறு தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதன்படி அவசரத் தேவைக்காக வழங்கப்பட்டு வந்த அனுமதி எளிமையாக்கப்பட்டு தகுந்த காரணங்கள் இருப்பின் உடனடியாக வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி வருங்காலங்களில் சென்னையை நோக்கி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். குறிப்பாக நேற்று ஒரு நாளில் மட்டும் 18,853 மனுக்கள் பெறப்பட்டு அதில் 18,823 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பயண அனுமதி பெற்று வரும் நபர்களை கண்காணித்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை மற்றும் இதர அலுவலகங்களின் வேலை காரணமாக வரும் நபர்களின் தகவல்களை அந்தந்த மண்டல அலவலர்கள் சேகரித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களில் வியாபார ரீதியாக வெளிமாவட்டங்களுக்கு சென்று வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதே போன்று அம்பத்தூர் மண்டலம், கிண்டி தொழிற்பேட்டை அமைந்துள்ள அடையாறு மண்டலம் ஆகியவற்றில் தொழிற்சாலைகள் அதிகம் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் வருகையும் அதிகரிக்கும். இது தொடர்பான தகவல்களையும் சேகரித்து அவர்களையும் முறையாக தனிமைப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரு குடும்பத்தைச் சேராதவருக்கு காங். தலைவர் பதவி… ப.சிதம்பரத்துக்கு கிடைக்குமா வாய்ப்பு?
, பதிவு இலவசம்!
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-corporation-orders-to-quarantine-those-who-are-coming-to-chennai-395017.html