சென்னையில் இன்று முதல் 9 இடங்களில் கடைகளைத் திறக்கலாம் – ஈரோடு, சேலத்தில் கடும் கட்டுப்பாடுகள் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில், தி.நகர் ரங்கநாதன் தெரு உள்ளிட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் 3 அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவது தொடர்ந்து காணப்பட்டால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதியை மூடும் நடவடிக்கைகளை பொதுமக்கள் நலன் கருதி முடிவு செய்யலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30ஆம் தேதி அறிவித்தார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் ஜூலை 30ஆம் தேதி நடைபெற்றது.

உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா... 20,34,04,086 பேர் பாதிப்பு - 43,06,935 பேர் மரணம்உலகம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா… 20,34,04,086 பேர் பாதிப்பு – 43,06,935 பேர் மரணம்

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, சென்னை தி.நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை; புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை; ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை; பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இதேபோல, ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை; அமைந்தகரை மார்க்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை; ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை; கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி என மொத்தம் 9 இடங்களில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கியமான வணிக வளாகங்கள் இருக்கும் 9 இடங்களில் கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி காலை 6 மணி வரை மூட உத்தரவிட்டு இருந்தோம். அந்த பகுதி வியாபாரிகள் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினோம்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இன்று முதல் கடைகளை திறக்க வணிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் கடைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. மேலும், கடையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

கடை உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத கடைகளை மூடி சீல் வைக்கவும் அந்தந்த மண்டல அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சேலம், ஈரோட்டில் கடும் கட்டுப்பாடுகள்

இதனிடையே சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதை கட்டுப்படுத்தும் வகையில், சேலம் மாநகர் எல்லைக்குள் செயல்படும் வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. குளிர்சாதனங்களை பயன்படுத்தவும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீ பஜார், வீரபாண்டியார் நகர் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஊரக பகுதிகளான கொங்கணாபுரம், வீரகனூரில் வரும் 23ஆம் தேதி வரை வாரச்சந்தை செயல்பட அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஏற்காடுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்களில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கட்டாயம் கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் வரும் 23ஆம் தேதி வரை மேட்டூர் அணை பூங்காவுக்கு செல்ல, பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50 வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருப்பூர், கோவையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In Chennai, permission has been granted to open the first shops today at 9 places including The Nagar Ranganathan Street. All employees working in the store are advised to get vaccinated as soon as possible. Corporation Commissioner Gagandeep singh bedi has said that shops violating the Corona Prevention Rules will be sealed.

Source: https://tamil.oneindia.com/news/chennai/shops-open-in-9-places-in-chennai-today-strict-restrictions-in-tiruppur-and-salem-429389.html