சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பொறுப்பு குழந்தையிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. பிப்ரவரி 22ல் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் பிப்ரவரி 2ல் கவுன்சிலர்களாக பொறுப்பேற்றனர். நேற்று மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணை தலைவரகள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மேயரானார் திமுகவின் பிரியா ராஜன்! முதல் பட்டியலின மேயர் என்ற பெருமை பெற்றார்
சென்னை மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மேயராக திமுகவின் ஆர்.பிரியா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேயராக அவர் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேயராக பொறுப்பேற்றுள்ள பிரியாவுக்கு வயது 28 தான். இதன்மூலம் இளம்வயது மேயர், சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமைகளை பெற்றார். அத்துடன் சென்னை மாநகராட்சியின் 3வது பெண் மேயராவார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யார் இவர்
மேயராக பதவியேற்றுள்ள பிரியா சென்னை மாநகராட்சியில் 74வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் திமுக முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி. சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால் பிரியாவுக்கு இந்த பதவி கிடைத்துள்ளது. இப்பதவிக்கு தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மூலம் பிரியா தரப்பு காய் நகர்த்தி வெற்றியும் பெற்றுள்ளது.
கலாய்த்த காயத்ரி ரகுராம்
இந்நிலையில் பாஜகவின் தமிழக கலை கலாச்சார பிரிவு தலைவியான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛குழந்தைக்கு மேயராக பொறுப்பை கொடுத்திருக்கிறீர்கள். அதனால் தான் ஒரு குழந்தையிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. எப்படியிருந்தாலும் வாழ்த்துக்கள் பிரியா அவர்களே” என கூறியுள்ளார். மேலும் இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் சென்னை மேயர் பிரியா அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களை சந்திக்கிறார்.
வீடியோவில் என்ன
அதில் நிருபர் ஒருவர், ‛‛வாழ்த்து பெற்றபோது முதல்வர் உங்களிடம் என்ன தெரிவித்தார்” என கேள்வி கேட்கிறார். பின்னால் இருந்த அமைச்சர் சேகர்பாபு, ‛‛நல்ல பணி செய்யனும்னு” என வாக்கியங்கள் எடுத்து கொடுக்க அதைக்கேட்டு பிரியா‛‛நல்லா பணி செய்யனும்னு சொன்னாங்க”என்றார். இதையடுத்து அங்கு இருந்த ஒருவர் பிரியாவை குழந்தை என கூறுவது வீடியோவில் தெளிவாக கேட்கிறது. இதை மேற்கொள் காட்டி தான் காயத்ரி ரகுராம் டுவிட்டரில் பிரியாவை குழந்தை என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தனிப்பெரும்பான்மை
முன்னதாக நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியிலுள்ள 200 வார்டுகளில் திமுக கூட்டணி 178 வார்டுகளில் வெற்றிபெற்றது. அதிமுக 15, அமமுக, பாஜக தலா ஒரு வார்டுகளிலும் வென்றது. 5 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றிபெற்றது. இதன்மூலம் திமுக தனிப் பெரும்பான்மையுடன் சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/responsibility-given-to-a-child-gayatri-raghuram-says-about-chennai-mayor-priya-450798.html