சென்னை புறநகரில் தடையை மீறி இயக்கப்பட்ட 61 ஆட்டோக்கள் பறிமுதல் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை புறநகரில் தடையை மீறி இயக்கப்பட்ட 61 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் ஆட்டோ, பஸ், கால் டாக்சி போன்ற வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சென்னை புறநகர் பகுதிகளில் தடையை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் உத்தரவின்பேரில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் திடீரென வாகன சோதனை செய்தனர். அப்போது தடை காலத்தில் உரிய அனுமதியின்றி ஆட்டோக்கள் இயக்கப்பட்டதை கண்டுபிடித்தனர். இதையடுத்து 33 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் மடிப்பாக்கம், பழவந்தாங்கல் பகுதிகளில் தடையை மீறி சவாரி சென்ற 28 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அரசு உத்தரவு வந்த பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/23005513/61-autos-seized-in-Chennai-suburbs.vpf