ஆரம்ப நிலை மின் வாகன உற்பத்தி நிறுவனமான பை பீம் (Pi Beam) நிறுவனம் மலிவு விலையிலான இ-பைக் ஒன்றை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பைமோ எனும் பெயரில் இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 30 ஆயிரம் ஆகும்.

ஆரம்ப காலகட்டத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆகியவை விற்பனைக்கு வருவதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட மிதிவிண்டிகளின் அடிப்படையில் இந்த இ-பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால், நவீன தோற்றத்திலான பழங்கால மின்சார இருசக்கர வாகனம் போன்று இந்த வாகனம் காட்சியளிக்கின்றது.

இதனை உருவாக்கியிருக்கும் பை பீம் நிறுவனமானது மெட்ராஸ் ஐஐடி-க்கு சொந்தமான நிறுவனமாகும். இதன் மாணவர்களின் பங்களிப்பின் மூலமாகவே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. அவ்வாறு, மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட முதல் இ-பைக்கே இந்த பைமோ எலெக்ட்ரிக் சைக்கிள்.

இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் ஒருவர் இருக்கையிலும், மற்றொருவர் கேரியரில் அமர்ந்து செல்லும் வகையிலும் வடிவமைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேரியர் அமைப்பு குறிப்பாக லக்கேஜ்களை ஏற்றிச் செல்லும் நோக்கத்திற்காகவே கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், இது ஓர் குறைந்த வேக திறன் மின்சார வாகனம் என்பதால் இதனை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இதுமட்டுமில்லைங்க, இதனை நாம் பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஆகையால், நிச்சயம் இந்த வாகனத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் பர்சில் இருக்கும் பணத்தைப் பெருமளவில் மிச்சப்படுத்த முடியும்.

குறிப்பாக, மலையளவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையுயர்வில் இருந்து நம்முடைய பாக்கெட்டுகளைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்த காரணத்திற்காக பலர் மின் வாகனங்களுக்கு மாற தொடங்கியிருக்கின்றனர். இவை பர்சை பாதுகாப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுற்றுச் சூழலுக்கும் நண்பனாக செயல்படும்.

இந்த வாகனத்தை 2021-2022க்கு உள்ளாக சுமார் 10 ஆயிரம் யூனிட்டுகளை விற்பனைச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ எனும் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதில் ஸ்வாப்பபிள் (தனியாக கழட்டிக் மாட்டி கொள்ளலாம்) வசதி என பல்வேறு சூப்பர் வசதிகள் இதில் அறிமுகம் வழங்கப்பட்டிருக்கின்றன.

அனைத்து வயதினரும் பயன்படுத்தும் வகையில் மிகவும் அடக்கமான மற்றும் நவீன தோற்றத்தில் இந்த வாகனத்தை பை பீம் நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதில் சிறப்பு வசதிகளாக ஸ்விங் ஆர்ம் மெக்கானிஸ்ம், ட்யூவல் ஷாக் அப்சார்பர் மற்றும் மிகவும் மிருதுவான இருக்கை உள்ளிட்டை பொருத்தப்பட்டிருக்கின்றன.

பை பீம் நிறுவனத்தின் இ-ட்ரைக், இ-கார்ட் மற்றும் இ-ஆட்டோ ஆகிய மூன்று மாடல் மின்சார வாகனங்களையும் விற்பனைச் செய்து வருகின்றது. இவையனைத்தும் குறைந்த விலை மின்சார வாகனங்களாகவே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன.
Source: https://tamil.drivespark.com/two-wheelers/2021/ev-start-up-pi-beam-launches-pimo-e-bike-in-india-at-rs-30000-026476.html