ஆன்லைன் ரம்மியால் காவலர் தற்கொலை முயற்சி.. காவலர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அட்வைஸ்! – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என்று போலீசாருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர்.

கடன் வாங்கிய பணத்தை இதில் விரயமாக்கியதால், வட்டி கட்ட வழியின்றி சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையானது.ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில் அப்போதைய அதிமுக அரசு, சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை செய்தது.

ஆனால் கடந்த மாதம் ஆகஸ்டு 3- ம் தேதி தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.

காவலர் ஒருவரே ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வேலுச்சாமி(24) என்ற ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரூ.7 லட்சம் அளவுக்குக் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் வேலுச்சாமி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என்று போலீசாருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை பெருநகர காவலில் பணியாற்றும் ஒரு காவலர் ஆளினர் பணியின்போதும், ஓய்வு சமயத்திலும் தன் நேரம் முழுவதையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் செலவழித்து அதிக அளவில் பணத்தை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிகழ்வு மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வு. இவ்வித தவறான சூதாட்ட நிகழ்வில் ஈடுபடும் காவல் ஆளினர்களின் இந்த செயலால் அவர்களது மனைவி, குழந்தைகள் மற்றும் தாய், தந்தையர் பாதிக்கப்படுவதுடன் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய காவல் துறையினர் இவ்வித தவறான செயல்களில் ஈடுபடுவதால் காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்பதை உணர்ந்து சூதாட்டம் போன்ற தவறான செயல்களில் காவல் ஆளினர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

English summary
chennai Police Commissioner Shankar Jiwal has advised police not to play online rummy. He said the police, who should be an example to all, should not engage in such misconduct

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-commissioner-shankar-jiwal-has-advised-police-not-to-play-online-rummy-432538.html